படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!
UGC வரைவு விதிமுறைகள் எல்லைகளை சுருக்குவதை அல்ல, அவற்றை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் படி, தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக UGC பரிந்துரைப்பவரும், மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, யூ.ஜி.சி புதிய விதியை கொண்டுவந்துள்ளது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பலரும் யுஜிசி புதிய நெறிமுறைகள் திரும்பபெறவேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.
அதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ” தமிழர்களுக்கு 4000 வருட வரலாறும், தொன்மையான மொழியும், பண்பாடும் இருக்கிறது. யுஜிசி புதிய நெறிமுறைகள் வெறும் கல்வி சம்பந்தப்பட்டது அல்ல; அது தமிழ்நாட்டின் பண்பாடு, மொழி ஆகியவற்றின் மீது ஆர்.எஸ்.எஸ் தொடுக்கும் தாக்குதல். பிற பண்பாடுகளையும் வரலாறுகளையும் அழித்து ஒற்றைத் தன்மையை திணிப்பதுதான் ஆர்.எஸ்.எஸின் லட்சியம்” என பேசியிருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் யுஜிசி வரைவு விதிமுறைகள் படித்துவிட்டு போராட்டம் செய்யுமாறு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” அரசியல் தலைவர்கள், தங்கள் காலாவதியான அரசியல் கதைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, முற்போக்கான கல்விச் சீர்திருத்தங்களை கற்பனை அச்சுறுத்தல்களாகத் திருப்புவதைப் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரிய வகையில் உள்ளது.
UGC வரைவு விதிமுறைகள் எல்லைகளை சுருக்குவதை அல்ல, அவற்றை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை குரல்களை அடக்குவதை அல்ல, அதிக குரல்களை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை நிறுவன சுயாட்சியையும் நமது மொழியியல் பன்முகத்தன்மையையும் நிலைநிறுத்துகின்றன. அவை நமது கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துகின்றன, பலவீனப்படுத்துவதில்லை. ஆனால் யதார்த்தத்தை விட சொல்லாட்சியை விரும்புவோருக்கு இந்த உண்மைகள் மிகவும் சிரமமாக இருக்கலாம்.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள், திருத்தம் தொடர்பான நடவடிக்கை என்பது அரசியலாக்கப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த இப்படி செய்கிறார்கள். ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஒருபோதும் இந்தியாவை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ராகுல் காந்தியும், அரசியலமைப்பின் ஆதரவாளர்கள் என்று தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்களும் தங்கள் ஒத்திகை அரசியல் நிகழ்ச்சிகளைத் (போராட்டம்) தொடங்குவதற்கு முன் வரைவு விதிமுறைகளை என்ன என்பதை படிப்பதில் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ‘ என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
It is both unfortunate and concerning to see how some political leaders, including the LoP, twist progressive educational reforms into imaginary threats to sustain their outdated political narratives.
The UGC draft regulations aim to broaden horizons, not narrow them. They seek…
— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 6, 2025