‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை ‘ஏலியன்கள்’ என அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை தலைவர் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chief Michael W. Banks

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கொண்டுவரப்பட்ட இந்த விமானம் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஆனால், தலைநகர் டெல்லிக்கு பதிலாக பஞ்சாபில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி வருகின்றன. மத்திய அரசு இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு அவைகளிலும் இந்த விஷயத்தை விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.  இதனையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர், “சட்டவிரோத குடியேறியவர்களை நாடு கடத்துவது வழக்கமான நடைமுறையாகும். 2012 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது. இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களை ‘ஏலியன்கள்’ என  அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை தலைவர் மைக்கேல் டபிள்யூ. பேங்க்ஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸை USBP வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திருப்பியனுப்பியது.கை, கால்களில் விலங்கிடப்பட்டது தொடர்பாக, சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படியே அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நுழைந்தால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே, கை, கால்களில் விலங்கு போடப்பட்டதைக் கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது, பாதுகாப்பு படை தலைவர் இப்படி கூறியுள்ளதால் இந்த விவகாரம், மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்