தவெக-வில் சாதி பார்க்கப்படுகிறதா? திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆவேசம்!
தவெகவில் சாதி பார்த்து பதவி தரப்படுகிறது என கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை. சிலர் பதவி தரப்படவில்லை என அவதூறு பரப்புகின்றனர் என திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கூறியுள்ளர்.
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் பொறுப்புகள் வழங்ப்படுகிறது என திருவண்ணாமலையை சேர்ந்த ஆரணி ஹரிஷ் எனும் தவெக பிரமுகர் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார்.
தான் அதிக வேலை செய்து வந்ததாகவும், ஆனால் தனக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை எனவும், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு வாக்கு சேகரித்தவருக்கெல்லாம் பதவி கொடுக்கிறார்கள் எனவும், தன்னை ரவுடி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவன் எனக் கூறி ஒதுக்கி வைத்து விடுகின்றனர் எனவும் ஆரணி ஹரிஷ் பரபரபாபு வீடியோ ஒன்றை தெரிவித்தார். மேலும், இங்கு நடப்பது எல்லாம் கட்சித் தலைவர் விஜய்க்கு தெரிவதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
நானும் தலித் சமூகத்தை சேர்ந்தவன்
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ” தவெகவில் சாதி பார்க்கிறார்கள் என்று கூறுவது தவறான கருத்து. அப்படி என்றால் நானும் தலித் சமூகத்தை சேர்ந்தவன் தான். எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளனர் .
திருவண்ணாமலையில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். சாதி பார்த்து இங்கு யாருக்கும் பதவி கொடுக்கவில்லை. உழைத்தால் தான் பதவி கொடுத்துள்ளார்கள். நான் ஆரம்ப காலத்தில் இருந்தே இங்கு இருக்கிறேன். முதலில் கிளை துணை செயலாளர் அடுத்து ஒன்றிய செயலாளர் அதன் பிறகு தான் இப்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாருடைய கைக்கூலி?
அவதூறு கூறிய ஆரணி ஹரிஷ், அருள்நிதி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இப்படி இருந்தால் எப்படி இங்கு பதவி தருவார்கள். இவர் யாருடைய கைக்கூலி என தெரியவில்லை. யாரிடமோ காசு வாங்கிட்டு தவெகவிற்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்.
பதவிக்கு காசு வாங்குவதாகவும் கூறுகிறார். நான் இதுவரை எனது பதவிக்கு என ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. நான் செய்த உழைப்பை ஒருவர் தலைமைக்கு எடுத்து சொன்னார். உழைக்காமல் யாருக்கும் இங்கு பொறுப்பு கிடைக்கவில்லை. சிலர் பொறுப்பு கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி அவதூறு பரப்பி வருகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் . பொதுத் தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு இதுவரை எந்த கட்சியுமே கொடுத்ததில்லை. ஆனால், பொது தொகுதியில் என்னை மாவட்ட செயலாளராக தளபதி தேர்வு செய்துள்ளார். ” என திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.