INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!
நாக்பூரில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் (லெவனை) இங்கிலாந்து அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாளை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நாளை விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அணியில், ஜோ ரூட் இணைந்துள்ள காரணத்தால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், 15 மாதங்களுக்கு பிறகு அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட களமிறங்குகிறார்.
அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி
பில் சால்ட் (wk), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (c), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பைர்டன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.
15 மாதங்களுக்கு பிறகு ஜோ ரூட்
ஜோ ரூட் கடைசியாக கடந்த 2023 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அவரது கடைசிப் போட்டி 2023 நவம்பர் மாதம், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் எடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது தான். அதனை தொடர்ந்து அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது 15 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறார்.
அணிக்கு திரும்பியது குறித்து ஜோ ரூட்
“நான் மீண்டும் குழுவில் இணைந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். ஒரு பெரிய கால இடைவெளிக்கு பிறகு, மீண்டும் இந்த குழுவுடன் சேர்ந்து புதிய வீரர்களுடன் விளையாடுவது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் இருந்தவர்கள் சிலருடன் மீண்டும் கலந்துகொள்வது மிகவும் உற்சாகமானது. என்னுடைய விளையாட்டை ரசிகர்ளுக்கு பிடித்த படி விளையாடவும் நான் காத்திருக்கிறேன்” எனவும் ஜோ ரூட் தெரிவித்தார்.