இந்தியாவுக்கு எதிரா எங்களுடைய இந்த வீரர் தான் திருப்புமுனை! ஜாஸ் பட்லர் அதிரடி பேச்சு!
எங்களுடைய அணியில் ஜோ ரூட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கப்படவுள்ளது. அதன்படி, முதல் ஒரு நாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.
இதனையடுத்து, இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு பக்கம் ஒரு நாள் தொடரை கைப்பற்றும் நோக்கத்தோடு இந்திய அணியும், மற்றோரு பக்கம் டி20 தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்து ஒரு நாள் தொடரை கைப்பற்றவேண்டும் என இங்கிலாந்து அணியும் பயிற்சி எடுத்து வருகிறார்கள். எனவே, இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள போட்டி விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் தங்களுடைய அணியை சேர்ந்த ஜோ ரூட் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என பேசியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் ” ஒரு நாள் தொடரில் நாங்கள் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து எப்படி விளையாடலாம் என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்.
ஏனென்றால், அணியில் பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வேகமாக எடுத்துவிட்டோம் என்றால் நமக்கு பெரிய சவால் இருக்காது என நினைக்கிறன். எனவே, எப்படி விக்கெட் வீழ்த்தலாம்? எப்படி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களுடைய அணியில் ஜோ ரூட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீண்டகாலமாக இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடி கொண்டு இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் அதிகமாக அவர் விளையாடியுள்ள காரணத்தால் அனுபவம் நிறைய இருக்கும். அவருடைய ஆர்வத்தை பார்க்கும்போது அவர் கிரிக்கெட்டை எந்த அளவுக்கு ரசிக்கிறார் என்பது எனக்கு தெரிகிறது. ஆர்வத்துடன் இந்தியாவுக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடரில் விளையாடி இங்கிலாந்து அணிக்கு தேவையான அனைத்தையும் வழங்குவார்.
அவரைப்போல அனுபவம் வாய்ந்த வீரர் இந்த தொடரில் எங்களுடன் விளையாடுவதால் கூடுதலாக பலம் இருப்பது போலவும் உணர்கிறேன். நிச்சியமாக இந்த தொடரில் சிறப்பாக பங்காற்றி ஒரு திருப்புமுனையாகவும் அமைவார்” எனவும் ஜாஸ் பட்லர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.