மகா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி!
பிரயாகராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார்.

பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும் திரிவேணி சங்கமம் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வும் மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி 13-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வரையில் 45 நாட்கள் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். விஐபிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு புனித நீராட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அமித்ஷா என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
அதேபோல இன்று (பிப்ரவரி 5) பிரதமர் மோடி பிரயாக்ராஜில் புனித நீராடுவார் என கூறப்பட்டிருந்தது. டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் இல்லை. இதனால் இன்று பிரதமர் மோடி புனித நீராடுவார் என கூறப்பட்டிருந்தது.
அதற்காக இன்று காலை பிரயாக்ராஜ் வந்தடைந்த பிரதமர் மோடி தகுந்த பாதுகாப்பு வசதிகளோடு திரிவேணி சங்கமத்திற்கு சென்றார். பிரதமர் புனித நீராடுவதை காண ஆயிரக்கணாக்கானோர் அங்கு சுற்றி குழுமி இருந்தனர். பின்னர் பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.இதனை அடுத்து பிரயாக்ராஜ் பகுதியில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.