நம்ம பிராவோ சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ரஷீத் கான்! இனி இதுதான் உச்சம்!
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ரஷீத் கான் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் முன்னாள் சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

தென் ஆப்பிரிக்கா : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் போல தென் ஆப்பிரிக்காவில் SA20 தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் ஐபிஎல் அணிகளின் சில நிறுவனங்கள் அங்கும் அணிகளை வாங்கி தொடரில் பங்கேற்று வருகின்றனர். இதில் தான் MI கேப் டவுண் அணி கேப்டனாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷீத் கான் செயல்பட்டு வருகிறார்.
ரஷீத் கான் எப்படியான பவுலர் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தியாவில் ஐபிஎல்-ல் அறிமுகமாகியும் சரி, சர்வதேச கிரிக்கெட் களத்திலும் சரி எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் என்றாலும் ரஷீத் கான் பந்தை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்களை குறிவைத்து கொள்ளலாம் எனும் அளவிற்கு அவரது வேகமான சுழற்பந்துகளை கணிக்கமுடியாதபடி இருக்கும். இதனாலேயே அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் எனும் லிஸ்டில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறார் 26 வயதே ஆன ரஷீத் கான்.
நேற்று SA20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியும், MI கேப் டவுண் அணியும் மோதின இதில், MI கேப் டவுண் அணி கேப்டன் ரஷீத் கான் வீசிய பந்தில் பார்ல் ராயல்ஸ் அணி துனித் வெல்லலேஜ் அவுட்டாகினார். அப்போது தான் ஒரு இமாலய சாதனையை ரஷீத் கான் முறியடித்தார். அதாவது, முன்னாள் சிஎஸ்கே வீரரும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான டுவைன் பிராவோ தான் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்தார். அந்த சாதனையை ரஷீத் முறியடித்தார்.
டுவைன் பிராவோ 570 டி20 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்கள் எடுத்து இருந்தார். இந்த சாதனையை ரஷீத் கான் தற்போது 461 வது டி20 போட்டியிலேயே முறியடித்துள்ளார். தற்போது வரை 633 விக்கெட்டுகள் வீழ்த்தி சர்வதேச, உள்ளூர் என மொத்தமாக டி20யில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2015இல் ஜிம்பாவே அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரராக கிரிக்கெட் களத்தில் உள்ளே புகுந்தார் ரஷீத் கான். சர்வதேச டி20 போட்டிகளில் ஆப்பானிஸ்தான் அணிக்காக விளையாடி 161 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முதலிடத்தில் டிம் சவூதி (நியூசிலாந்து) 164 விக்கெட்டுகளுடன் உள்ளார். மேலும் 2021ஆம் ஆண்டு 53 டி20 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட் கடந்து குறைவான இன்னிங்ஸில் 100 விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரஷீத் கான்.
இந்த சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் ரஷீத் கான் பேசுகையில், ” இது ஒரு சிறந்த சாதனை. 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த சாதனையை அடைவேனா என்று நீங்கள் கேட்டிருந்தால், நான் அதைப் பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை என்று தான் சொல்லி இருப்பேன். பிராவோ ஓர் சிறந்த டி20 பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவர் மீது எப்போதும் சிறந்த மரியாதை வைத்துள்ளேன். இந்த சாதனையை தொடர்ந்து, மேலும் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025