கும்பமேளா கூட்டநெரிசல் : ‘ அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை ‘ பாஜக எம்பி ஹேம மாலினி பேச்சு!
கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழப்பு அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை என பாஜக எம்.பி. ஹேம மாலினி கூறியுள்ளார்.

அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில், பாஜக எம்.பி. ஹேம மாலினி கும்பமேளா கூட்ட நெரிசலில் நடந்த உயிரிழப்புகளை குறித்தும், இது அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்து கூறியதாவது “நாங்கள் கும்பமேளாவுக்குச் சமீபத்தில் சென்றிருந்தோம். அங்கு சென்று நாங்கள் நன்றாக நீராடினோம். அங்கு இதற்கான ஏற்பாடுகள் மற்றும், எல்லாம் நன்றாக நிர்வகிக்கப்பட்டுள்ளது.
கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகப் பெரிய சம்பவம் கிடையாது. கும்பமேளாவிற்கு இவ்வளவு பேர் வருகிறார்கள், எனவே, நிறையே பேர் அங்கு வருகை தந்த காரணத்தால் அதை நிர்வகிப்பது மிகவும் கடினம்” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர் ” இந்த நெரிசல் ஏற்பட்டதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு மறைத்து வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியது குறித்து கேட்டார். அதற்கு பதில் கூறிய ஹேம மாலினி “அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள். தவறான விஷயங்களைச் சொல்வது அவர்களின் வேலை” எனவும் தெரிவித்தார்.
கும்பமேளாவில் மக்கள் உயிரிழந்த இந்த சம்பவம் பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள். இந்த சூழலில், பாஜக எம்.பி. ஹேம மாலினி இப்படி கூறியுள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.