பெரிய ஹீரோ பாட்டுக்கு பயங்கர பில்டப் கொடுக்க செலவு பண்றாங்க! சாம் சிஎஸ் ஓபன் டாக்!
இப்போது வரும் பாடல்கள் ஆரம்ப காலத்தை போல தரமானதாக இல்லை என இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். அடுத்ததாக புஷ்பா 2 வெற்றியை தொடர்ந்து ரவிமோகன் படத்திற்கும், ரெட்ட தல என சில படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில், இவர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது இப்போது வரும் பாடல்களின் தரம் குறைந்துவிட்டதாகவும், இப்போது ட்ரெண்ட் ஆகவேண்டும் என்றால் ஒரு பாட்டு வரப்போகுதுன்னா அதுக்கு நாலு நாளைக்கு முன்னாடியே பயங்கர பில்டப் கொடுக்கணும் எனவும் பல விஷயங்களை மனம் திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” கதைக்கு இசையமைப்பதை பார்ப்பதை விட யாருக்கு இசையமைக்கிறார்கள் என்று தான் பலரும் பார்க்கிறார்கள். நிறைய நல்ல படங்களுக்கு நான் இசையமைத்துவிட்டேன் என எனக்கு தோணுகிறது. ஆனால், என்னுடன் இருப்பவர்கள் நீங்கள் இன்னும் அஜித், விஜய் படங்களுக்கு இசையமைக்கவில்லை என கூறுகிறார்கள். எனக்கும் கமர்ஷியல் பாடல்கள் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதெல்லாம் பெரிய ஹீரோக்கள் படங்களில் தான் இசையமைக்க முடியும்.
இப்போதெல்லாம், ஒரு பாட்டு வரப்போகுதுன்னா அதுக்கு நாலு நாளைக்கு முன்னாடியே பயங்கர பில்டப் கொடுக்கணும். என்னோட பாட்டுக்கு நான் அப்படி பண்றது இல்ல. இதுவரைக்கு நான் இசையமைக்க வந்து சில வருடங்கள் ஆகிறது. என்னுடைய பாடலை விளம்பரம் செய்ய நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்தது இல்லை. அப்படி விளம்பரம் செய்ய எனக்கு எந்த அவசியமும் இல்லை.
என் பாட்டு வர அதே வாரத்துல இன்னொரு பெரிய ஹீரோ படத்தோட பாட்டுக்கு பயங்கர பில்டப் கொடுக்கப்படுது. அதுக்கு எவ்வளவு செலவு பண்றாங்கன்னு எனக்கு தெரியும். ஆனா அந்த பணம்தான் எனக்கு கொடுக்கப்படும் சம்பளம். அத பத்தி நான் கவலை படுவதில்லை” எனவும் சாம் சிஎஸ் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் ” ஆரம்ப காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, தேவா, யுவன் இவர்கள் தனி தனியாக தன்னுடைய பாணியில் பல நல்ல பாடல்களை கொடுத்தனர். இப்போது அந்த மாதிரியான பாடல்கள் வருவதில்லை. நாங்கள் ரசிகர்களுக்கு பிரியாணியை அல்ல, தயிர் சாதத்தை மட்டுமே ஊட்டுகிறோம். இப்போதெல்லாம் வேகமான பீட் பாடல்கள் மட்டுமே வருகின்றன, அந்த அதிர்வு 15 நிமிடங்களில் முடிந்துவிடும்.இப்போது இசைத் தரம் மிகவும் குறைந்துவிட்டது” எனவும் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார்.