பெரியார் குறித்து சீமானின் பேச்சு…ஒரே வார்த்தையில் உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்!
பெரியார் பற்றிய சீமானின் பேச்சுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி அஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அந்த நபர் ஈடுபட்டபோது அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவலை கொடுத்து அஜய்யை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாரை விமர்சனம் செய்து வருவதே ஓயாத சர்ச்சையாக இருந்து வருகிறது. இந்த சூழலில், கட்சி நிர்வாகி பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை இந்த சம்பவத்திற்கு தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக, மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது ” சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது ஏறி நின்று காலணியால் அடித்திருக்கிறார்கள். இச்செயல் கடும் கண்டனத்துக்குரியதாகும். தந்தை பெரியார் சிலையை அவமதித்த நபர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வதோடு, அந்தகும்பலை குண்டர் சட்டத்தின் கீழ் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும்” என கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் “பெரியார் சிலை அவமதிப்பு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது, நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர் அவரிடம் ” இது பெரியார் மண்ணு இல்லை பெரியாரே மண் தான் என சீமான் பேசியுள்ளார். அது குறித்து உங்கள் கருத்து என்ன? என கேட்டார். அந்த கேள்விக்கு பதில் சொன்ன துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் “அவருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு சென்றார்.