“கால்பந்தில் நான் தான் சிறந்த வீரன்! மெஸ்ஸி, மரடோனா, பீலே..,” ரொனால்டோ பெருமிதம்!
கால்பந்து வரலாற்றில் நான் இதுவரை பார்த்ததில், முழுமையான கால்பந்து வீரனாக என்னை பார்க்கிறேன் என கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறியுள்ளார்.
ரியாத் : AFC சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் (Al Nassr F.C) அணியும், அல் வாசல் (Al Wasl F.C ) அணியும் மோதின. இதில் ரொனால்டோவின் பெனால்டி கிக் மூலம் ஒரு கோல் உட்பட 2 கோல்கள் என மொத்தம் 4 கோல்கள் அடித்து 4-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி வெற்றிபெற்றது.
வெற்றிக்கு பிறகு பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னை பற்றியும் மற்ற கால்பந்து நட்சத்திர விளையாட்டு வீரர்களை பற்றியும் மனம் திறந்து பேசினார். குறிப்பாக சமகால போட்டியாளராக பார்க்கப்படும் மெஸ்ஸி பற்றியும் பேசினார். தான் தான் சிறந்த கால்பந்து வீரன் என தற்பெருமையுடன் வெளிப்படையாக கூறினார்.
நான் தான் சிறந்த வீரன் :
அவர் கூறுகையில், “கால்பந்து வரலாற்றில் நான் இதுவரை பார்த்ததில், முழுமையான கால்பந்து வீரனாக என்னை நான் பார்க்கிறேன். பல்வேறு மக்களுக்கு மெஸ்ஸி, மரடோனா, பீலே என பலரை பிடித்திருக்கலாம். நான் அதை மதிக்கிறேன். ஆனால், கால்பந்து விளையாட்டில் நான் மிகவும் முழுமையானவன். கால்பந்து வரலாற்றில் கோல் கணக்கு அடிப்படையில் நான் தான் சிறந்த வீரன். என்னை விட சிறந்த வீரரை நான் கால்பந்து வரலாற்றில் பார்த்ததில்லை. இதை நான் என் இதயத்திலிருந்து உண்மையைச் சொல்கிறேன். ” என்று கூறினார்.
நானும் மெஸ்ஸியும்..,
மெஸ்ஸி பற்றி ரொனால்டோ கூறுகையில், ” மெஸ்ஸியுடன் எனக்கு ஒருபோதும் மோசமான உறவு இருந்ததில்லை. நாங்கள் 15 வருடமாக பல்வேறு விருதுகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். எப்போதும் நன்றாகப் பழகி வருகிறோம். நான் அவருக்காக ஒரு சமயம் ஆங்கிலத்தை மொழிபெயர்த்துள்ளேன். அது மிகவும் வேடிக்கையான நிகழ்வு.
மெஸ்ஸி தனது கிளப்பையும், நான் என்னுடைய கிளப் அணியையும், மெஸ்ஸி அவரது தேசிய அணியையும், நான் என்னுடைய தேசிய அணியையும் முன்னிறுத்தி வருகிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்து தெரிவித்துகொள்வோம். அவர் பல ஆண்டுகளாக கால்பந்தில் விரும்பிய எல்லாவற்றையும் விளையாடியுள்ளார். நானும் அப்படித்தான் செய்தேன். இது ஒரு ஆரோக்கியமான போட்டியாகவே நன் பார்க்கிறேன்.” என தனது திறமை மீது முழு நம்பிக்கையுடனும், தன் சக போட்டியாளர் மீதான மரியாதையையும் பற்றி கூறினார் அல் நாசர் கிளப் மற்றும் போர்ச்சுகீசிய நாட்டு கால்பந்து அணிகளின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.