காலநிலை மாற்ற உச்சி மாநாடு 3.O : “அனைத்து பள்ளிகளிலும் முக்கிய அறிவிப்பு” மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாடு அரசு பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகிய இரண்டையம் இரு கண்காளாக் கருதி தொடர்ந்து செயலாற்றி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலநிலை மாற்றம் உச்சி மாநாட்டில் பேசியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு 3.O சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடக்கும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் சுற்றுசூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல் உலக நாடுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் குறித்தும் அதன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில்,”காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளோடு , அதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எனது தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மற்றம் பற்றி ஆய்வு செய்ய இந்தியாவிலேயே முதன் முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு தான். சுற்றுசூழல் துறையின் பெயரில் காலநிலை மாற்றத்துறை எனும் பெயரையும் சேர்த்து மாற்றியுள்ளோம். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலை இயக்கம், நெய்தல் இயக்கம் ஆகிய இயக்கங்கள் மூலம் இதற்கான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது.
துபாய் முதல் திருவண்ணாமலை வரை …
அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் காலநிலை உச்சி மாநாட்டை சுற்றுசூழல் துறையின் கீழ் இயங்கும் காலநிலை மாற்ற இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடாத்தியுள்ளோம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. துபாய், சீனா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம், அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ ஆகியவை காலநிலை மாற்றத்தால் உருவாகியுள்ளன. வெப்ப அலை பாதிப்புகலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது என்பதை நினைவு கொள்ள வேண்டும். கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கும், திருவண்ணாமலையில் ஏற்பட்ட சிறிய நிலச்சரிவுக்கும் காரணம் காலநிலை மாற்றம் தான். இதனை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
காலநிலை மாற்றம் என்றால் என்ன, விளைவு என்ன, எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு காலநிலை கல்வி பெற்ற சமூகமாக இருக்கும். இது பேரிடரில் இருந்து மக்கள் மீண்டு வர உதவியாக இருக்கும்.
எல்லா பள்ளிகளிலும்..,
காலநிலை மாற்றம் குறித்த கல்வியை கல்வித்துறையில் இருந்து தான் துவங்க வேண்டும். இது குறித்த ஓர் முக்கிய அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழலியல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்விக்கென ஒரு புதிய கொள்கை வகுத்து தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது. எல்லோருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடம் சேர்க்க இருக்கிறோம். பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கும் காலநிலை பற்றிய பயிற்சி வழங்கப்படும்.
வெப்ப அலையை மாநில பேரிடராக் அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. வெப்ப அலையால் உயிரிழப்பு ஏற்பட்டால் நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். வெப்ப அலைக்கான மருத்துவ வசதிக்கு மாநில பேரிடர் நிதிகளை பயன்படுத்திகொள்ளலாம். தமிழ்நாடு அரசு பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஆகிய இரண்டையம் இரு கண்காளாக் கருதி தொடர்ந்து செயலாற்றி வருகிறது. காலநிலை மாற்றம் குறித்த ஒவ்வொரு முன்னெடுப்பும். எதிர்கால சூழலியலை கருத்தில் கொண்டு காலநிலை கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.