விராட் கோலி ‘க்ளீன்’ போல்டு! “பவுலர் ஒரு ரத்தினம்” புகழ்ந்து தள்ளிய அஷ்வின்!
ராஞ்சி தொடரில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய ரயில்வே அணி பவுலர் ஹிமான்ஷு சங்வானை ரவிச்சந்திரன் அஷ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான ராஞ்சி தொடரிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. அதனை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா, பண்ட் என பலரும் ராஞ்சி தொடரில் விளையாடினர்.
இதில் பல வருடங்களுக்கு பிறகு ராஞ்சியில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு ராஞ்சி தொடரில் ரயில்வே அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து கிளீன் போல்ட் ஆகி அவுட் ஆனார். இது கோலி ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் விராட் கோலியையே அவுட் ஆக்கிய அந்த பவுலர் யார் என்றும் இணையத்தில் பேச ஆரம்பித்துவிட்டனர்.
யார் இந்த ஹிமான்ஷு சங்வான்?
ரயில்வே அணிக்காக பந்துவீசி வரும் ஹிமான்ஷு சங்வான் தான் கோலி விக்கெட்டை வீழ்த்தினார். இவர் டெல்லி ரயில் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 29 வயதான சங்வான் 24 ராஞ்சி போன்ற முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 17 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் 7 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் U19 இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்டுடன் விளையாடி உள்ளார். விராட் கோலி போன்று, ரகானே, ப்ரித்வி ஷா ஆகியோரது விக்கெட்டுகளையும் இவர் வீழ்த்தியுள்ளார்.
சங்வான் ஒரு ரத்தினம் :
இவரை பற்றி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பாராட்டி பேட்டியளித்துள்ளர். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அஷ்வின், ” ஹிமான்ஷு சங்வான் சிறப்பாக பந்து வீசினார். அவர் சாதாரணமான ரஞ்சி டிராபி வீரர் இல்லை. அவர் திறமை மிகுந்த ஒரு வீரர். கிரிக்கெட் களத்தில் சங்வான் ஒரு உண்மையான ரத்தினம். அவர் வீசிய பந்து வழக்கமானது அல்ல, முற்றிலும் மாறுபட்டது. பேட்டிற்கும் பேடுக்கும் இடையில் உள்ள சரியான இடைவெளியில் புகுந்து ஆப் ஸ்டம்பை தட்டி தூக்கியது . இது ஒரு தரமான செயல், அதற்கு பரிசாக கோலியின் விக்கெட் கிடைத்தது.
விராட் கோலியின் பேட்டிங் நுட்பத்தை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். அவரது பேட் சற்று வேகமான இயக்கத்துடன் கீழே வந்தது. 140-145 கிமீ வேகத்தில் பந்து வரும் என கணித்து பந்தை அவர் எதிர்கொண்டார். பேட்டர்களின் இந்த பேட்டிங் வேகத்திற்கு ஏற்ப பந்தின் வேகத்தை மாற்றிக் கொள்வது பவுலர்களுக்கு மிக முக்கியம். இடையில் இந்த நேரத்தை கணக்கிடுவதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. அதனை கணித்து பந்து வீசும் போது தான் உண்மையாகவே சில முக்கிய மாற்றங்கள் ஏற்படும்.
கனவு நனவாகியது :
விராட் கோலி நாடு முழுவதும் எண்ணற்ற இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். அவரது விக்கெட்டைப் பெறுவது என்னை பொறுத்தவரையில் இது ஒரு மகத்தான தருணம். உண்மையிலேயே சங்வானின் ஒரு கனவு நனவாகியது போன்று இருக்கும் என நினைக்கிறன். ” என சங்வானின் பந்துவீச்சை ஒரு பந்துவீச்சாளராக உன்னிப்பாக கவனித்து வெகுவாக பாராட்டினார் ரவிச்சந்திரன் அஷ்வின்.