பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி களத்தில் உள்ளனர்.
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு இறுதியாக, 46 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
அதே சமயம், இந்த இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சி அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், புதியதாக தொடங்கிய தவெக கட்சி வரை பெரும்பாலான கட்சிகள் தாங்கள் இந்த முறை போட்டியிடவில்லை எனவும் அறிவித்திருந்தனர். எனவே, இதனால் பெரும்பாலும் ஆளும் திமுக வேட்பாளர் வெற்றி பெரும் நிலை உள்ளது. அதற்கடுத்து பிரதான கட்சியாக எதிர்பார்க்கப்படுவது நாம் தமிழர் கட்சி தான் எனவும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
தேர்தலில் திமுக சார்பாக வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதா லட்சுமி ஆகியோர் போட்டியிடவிருக்கிறார்கள். தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இரண்டு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டார்கள். சீதா லட்சுமிக்கு ஆதரவாக இறங்கி சீமான் தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதைப்போல, திமுக சார்பிலும் வி.சி.சந்திரகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த சூழலில், தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் இறுதி பிரச்சாரத்தை 6 மணிக்கு முடித்துக்கொண்டனர். இந்த முறை ஏனைய கட்சிகள் போட்டியிடவில்லை என்பதால் வழக்கத்தை விட ஈரோடு களையிழந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.