வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க மத்திய அரசு திணறி வருகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று திங்கள் கிழமை மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில விஷயங்களை குற்றம் சாட்டி வெளிப்படையாகவே பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே இந்த முறையும் குடியரசுத் தலைவர் உரையில் கிட்டத்தட்டக் கேட்டேன். குடியரசுத் தலைவர் உரையில் எந்தவிதமான முக்கிய அம்சங்களும் இல்லை. என்னை பொறுத்தவரை என்னுடைய கருத்து என்னவென்றால், குடியரசுத் தலைவர் உரை இப்படி இருக்கக்கூடாது.
இப்போது நாட்டின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே உள்ளது.வேலையில்லா திண்டாட்டம் நட்டில் உள்ளது. இந்த திட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது தான் இப்போது உண்மையான ஒன்று. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்ப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” எனவும் காட்டத்துடன் தன்னுடைய கேள்விகளை எழுப்பினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாக இருந்தாலும், பாஜக கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் வேலை வாய்ப்பு பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்பது பெரிய சோகமான விஷயம்.
நம்மளுடைய நாட்டில் நுகர்வோர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், உற்பத்தி என்பது சீனாவிடம் தான் இருக்கிறது. எனவே , இந்தியா இப்போது உற்பத்தி செய்வதில் தான் கவனம் செலுத்தவேண்டும். உற்பத்தியை விடுத்து நுகர்வில் கவனம் செலுத்தினால் பற்றாக்குறை ஏற்படும்.
அதைப்போல, இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது” எனவும் ராகுல் காந்தி பேசினார். இதனையடுத்து, ராகுல் காந்தியின் பேச்சுக்கு அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தனர். குறிப்பாக, அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜு ” வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது” என பதில் அளித்தார்.