பட்ஜெட் 2025 : தமிழ்நாட்டின் ஒரு கோரிக்கை கூட சேர்க்க மனம் வரவில்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

nirmala sitharaman and M K Stalin

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் என பல அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து, தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு, ஆகியோர் பேசியிருந்தார்கள். அவர்களை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் – இரயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்?

எது தடுக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா? ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை.

விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது. வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? எனவும் காட்டத்துடன் தன்னுடைய அடுக்கடுக்கான கேள்விகளை மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்