கனடா, மெக்சிகோவுக்கு 25%., சீனாவுக்கு 10%! அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%-ம், சீனாவுக்கு 10%-ம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனை செயல்படுத்தும் வகையில் தற்போது பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தும் வருகிறார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், அதன் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாயை ஈட்டும் நோக்கிலும், தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தியுள்ளார்.
அதன்படி, அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் நேற்று வெள்ளை மாளிகையின் செய்தியாளர் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், திடீரென்று கூடுதல் வரி விதிப்பால், இறக்குமதி பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்றும், மற்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வரி விதிப்பானது இன்று (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.