தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா – விசிக தலைவர் திருமா ‘திடீர்’ சந்திப்பு!
தவெகவில் முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஆதவ் அர்ஜுனா.

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில் இருந்து விலகிய ஆதவ் ஆர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் பொறுப்பு, அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு ஐடி விங் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு, பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு நியமனம் செய்யப்பட்டது.
இதில் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் நியமனம் அரசியல் களத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து கொண்டு திமுகவை விமர்சித்து தொடர்ந்து பேசி வந்தர். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியும் அரசியல் பேசிய காரணத்தால் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஆதவ் அர்ஜுனா.
அதன் பிறகு தன்னை விசிகவில் இருந்து விலக்கி கொண்டார் ஆதவ் அர்ஜுனா. இவர் திமுகவுக்கு தேர்தல் பணியும் தனது தேர்தல் வியூக நிறுவனம் மூலம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரதான அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்த ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தது உற்றுநோக்கப்படுகிறது.
இப்படியான அரசியல் சூழலில், தவெக தேர்தல் பிரிவு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு நியமிக்கப்பட்டவுடன், தனது ஆஸ்தான அரசியல் தலைவரான திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில் “எனதும் அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன். தவெகவும் விசிகவும் எதிரெதிர் கட்சிகள் இல்லை. நானும், திருமாவளவனும் கொள்கை ரீதியாக ஒருமையாக உள்ளோம். ” என கூறியுள்ளார்.