சாதி மறுப்பு திருமணம்., இரட்டை கொலை! மரண தண்டனை கொடுத்தது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்!
சாதி மறுப்பு திருமணம் செய்த கனகராஜ், வர்ஷினி தம்பதியை கொலை செய்த வினோத்குமாருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கோவை : கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இரட்டை ஆணவ படுகொலை வழக்கில் இன்று குற்றவாளி வினோத் குமாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. வினோத் குமாரின் தம்பி கனகராஜ் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஆகியோரை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக வினோத் குமார் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமுதா என்பவர் உயிரிழந்த வர்ஷினி பிரியாவின் தாயார். மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கனகராஜ என்ற மாற்று சமூகத்தை சேர்ந்தவரும், வர்ஷினியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு கனகராஜின் அண்ணன் வினோத்துக்குமார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் கனகராஜ், வர்ஷினி பிரியா ஆகியோரை தனது கூட்டாளிகளான கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோருடன் வினோத்குமார் கடந்த 25.6.2019 அன்று அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து கனகராஜை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த வர்ஷினி பிரியாவையும் வினோத்குமார் வெட்டியுள்ளார். இதில் கனகராஜ் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி பிரியா இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு, திட்டம் தீட்டி கொலை செய்தல் பிரிவின் கீழ் வினோத் குமார், கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு , கோவை எஸ்சி எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்ற அமர்வு முன் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதில் நீதிபதி விவேகானந்தன் கடந்த ஜனவரி 23ஆம் தேதி வினோத் குமாரை குற்றவாளி என தீர்ப்பளித்தார். மற்ற மூவரையும் விடுவித்தார்.
வினோத்குமாருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வர்ஷினியின் தரப்பிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தரப்பு இது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு கொடூர கொலை எனக்கூறி இதற்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. குற்றவாளி தரப்பு, இது அரிதினும் அரிதான வழக்கு அல்ல என்றும் வினோத்குமார் அங்கு சென்று பார்க்க சென்றார் அப்போதே கோபத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது என்று கூறப்பட்டது. இருதரப்பையும் விசாரித்த நீதிமன்ற அமர்வு, இது அரிதிலும் அரிதான வழக்கு என குறிப்பிட்டு, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான சட்டப்பிரிவு 302 இன் கீழ் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படவில்லை ஏனென்றால், தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அதுவே உச்சபட்ச தண்டனையாக இருப்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக தண்டனை வழங்க வேண்டியது இல்லை எனக்கு குறிப்பிட்டு தீர்ப்பளித்து உள்ளார்.” என வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : டெல்லி முதல்வர் முதல்…வாரணாசியில் சிக்கிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் வரை!
February 20, 2025
INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!
February 20, 2025