கும்பமேளா கூட்ட நெரிசல் : 30 பேர் பலி., 4 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்! உ.பி போலீசார் விளக்கம்!
கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உபி காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் என மூன்றும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளிக்க நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று அதிகாலை இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு, அதிகளவில் விஐபிக்கள் வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசார் செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பில் குறைபாடு என காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து குறித்து டிஐஜி வைபவ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “இன்று அதிகாலை பிரம்ம முக்கூரத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராட அதற்கு முன்னர் சரியாக 1 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அகார மார்க்கத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமானது.
அப்போது தடுப்புகள் உடைந்து எதிர் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்த்ர்கள் மீது பலர் மோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்தில் இருந்து 90 பேர் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அதில் 25 பேர் உடல் அடையாளம் காணப்பட்டள்ளது 5 பேரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
உயிரிந்த்ததில் 4 பேர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர், ஒருவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். எ ஐந்து விபத்தில் 60 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது வரை 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் துறவிகள், விஐபிக்கள் தாமதமாக நீராட அறிவுறுத்தப்படுகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்ட நெரிசல் விபத்து காரணமாக முதலமைச்சார் யோகி ஆதித்யநாத்தின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.” என கும்பமேளா சிறப்பு டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறியுள்ளார்.