ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை துரத்திய மர்ம நபர்கள்! விளக்கம் கொடுத்த போலீசார்!
சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை சொகுசு கார் இளைஞர்கள் துரத்திய சம்பவத்தில் நடந்தது என்ன என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது ஒரு பதைபதைக்க வைக்கும் வீடியோ. அந்த வீடியோவில் பெண்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே, குறிப்பிட்ட கட்சிக் கொடி பொருத்தப்பட்ட ஒரு கார் அவர்களை சாலையில் வழிமறிக்கிறது. அதனை அடுத்து அதில் இருந்து ஒரு நபர் ஓடி வருகிறார்.
இதனை கண்டதும் பதறிய அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்து காரை வேறு பக்கம் திருப்பி சென்றனர். அப்போது காருக்குள் இருந்த பெண்கள் பதறியபடி அங்கிருந்து யாருக்கோ போன் செய்ய சொல்லி இன்னொரு பெண்ணிடம் கூறுவது போல அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. சமூக வலைதளத்தில் வைரலாகும் இந்த வீடீயோவையும் அதில் கட்சிக்கொடி இருப்பதையும் குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் ஆளும் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தங்கள் விளக்கத்தை அளித்துள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது எனவும் கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று கானத்தூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து பெண்கள் புகார் அளித்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் முட்டுக்காடு மேம்பாலத்தில், கோவளம் கடற்கரையில் பக்கிங்ஹாம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்வையிட்டு வந்த சமயம் ஒரு சொகுசு கார் ஒன்று அங்கு நின்றுள்ளது. அதனை இந்த பெண்கள் வந்த கார் லேசாக உரசியாதாக கூறப்படுகிறது.
அப்போது இதுபற்றி அந்த பெண்கள் எதுவும் கூறாமல் சென்றுவிட்டனர் என்றும், அதனால் தான் சொகுசு காரில் வந்தவர்கள் வெகுதூரமாக இந்த பெண்கள் காரை துரதியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 2 கார்கள் கொண்டு துரத்தியதாகவும், அச்சத்தில் காரில் இருந்த பெண்கள் வீடியோ எடுத்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கானத்தூர் அருகே மேம்பாலத்திற்கு கிழே வந்த அந்த சொகுசு காரில் இருந்து ஒருவர் வந்து பெண்களை கிழே இறங்க சொல்லி இருக்கிறார்கள். என போலீசார் முதற்கட்டகமாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை காவல்துறையினர் துரிதப்படுத்தி உள்ளார்கள். வீடியோ பதிவு அடிப்படையில் அந்த நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், வீடியோ பதிவு செய்யப்பட்ட அந்த காரில் 4 பெண்கள், ஒரு ஆண் மற்றும் குழந்தை ஒன்றும் உள்ளே இருந்ததாகவும் கூறப்படுகிறது.