வேங்கைவயல் விவகாரம் : உயர் நீதிமன்ற சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்!
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ வேண்டாம், உயர் நீதிமன்ற சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கு குறித்து வெளியான குற்றப்பத்திரிகை இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆயுதப்படை காவலராக இருந்த முரளி ராஜா (வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்), முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூன்று பேர் தான் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவர் பத்மா என்பவரின் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் இச்சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்திருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் என கூறப்பட்ட 3 பேரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிபிஐ விசாரணைக்கு இதனை மாற்ற வேண்டும் என திருமாவளவன், அண்ணாமலை, பா.ரஞ்சித் ஆகியோர் கூறினார்கள். அவர்களை தொடர்ந்து இன்னும் சில அரசியல் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது த.வெ.க தலைவர் விஜய் வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.
வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் விஜய் தன்னுடைய பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்!
ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும்…
— TVK Vijay (@tvkvijayhq) January 26, 2025