டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசு! “பிரதமர் மோடிக்கு நன்றி” – அண்ணாமலை
அரிட்டாப்பட்டி பல்லுயிர் மண்டல பாதுகாப்பை கருத்தில் கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னைக்கு வருகை தந்து கிராமப் பெரியவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது எனவும், இந்தச் சந்திப்பின் முடிவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை, மத்திய அமைச்சர் அறிவிக்கவிருக்கிறார் எனவும் ஏற்கனவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தற்போது அரிட்டாப்பட்டி பல்லுயிர் மண்டல பாதுகாப்பை கருத்தில் கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார். அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ” டங்ஸ்ட்டன் சுரங்கம் ஏலம் ரத்து செய்யு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
டங்ஸ்டன் சுரங்கம் தேவையென்றாலும் விவசாய பகுதி,பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வது என்பது சுலபமான விஷயம் கிடையாது. எனவே, மத்திய அரசுக்கு தமிழக பாஜக சார்பில் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால் மதுரை அரிட்டாபட்டி பகுதி மக்கள் இன்று நிம்மதியாக தூங்குவார்கள்” எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.