சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துணிச்சல் இருக்கிறதா? – சீமான் கேள்வி!

பிரபாகரன் உடன் நான் இருக்கும் புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால் அதற்கு ஆதாரம் தாருங்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.

seeman

சென்னை : பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

ஏற்கனவே, பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு சீமான் வீட்டை பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 முற்றிகையிட்ட நிலையில், மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், என்னுடைய கருத்து தவறு என்றால் பெரியார் கருத்தும் தவறு தான் என மீண்டும் பேட்டியளித்துள்ளார்.  இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தபோதும் பெரியாரை விமர்சித்து சீமான் மீண்டும் பேசியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது சென்னை நீலாங்கரையில் தனது வீட்டில் சீமான் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தமிழக அரசை நோக்கி சில கேள்விகளையும் எழுப்பினார். பெரியார் குறித்த நான் பேசியதற்கு என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். அந்த வழுக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் நான் நிற்கும்போது ஆதாரத்தை உரிய நேரத்தில் சொல்கிறேன். என்னிடம் இருக்கிறது அப்போது தேவையான அனைத்து ஆதாரங்களையும் அங்கு போட்டு காட்டுகிறேன்” என கூறினார்.

அதனை தொடர்ந்து  “நானும் என் அண்ணன் பிரபாகரனும் எடுத்துக்கொண்ட  படத்தை, வெட்டி – ஒட்டியதாக கூறுகிறீர்களே, அதற்கு ஆதாரம் காட்டுங்கள். 15 வருடங்களாக இந்த படம் உள்ளது. திடீரென வந்துவிட்டு அந்த புகைப்படம் நான் எடிட் செய்தது என்று கூறுகிறீர்கள்?” என கூறினார். அதன் பின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எப்படி வெட்டி ஒட்டினார் என்பதை அவரிடமே கேளுங்கள் எனவும் சீமான் பதில் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசுக்கு சீமான் கேள்விகளை எழுப்பினார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு துணிவு உள்ளதா? சமூக நீதி என்று பேசுகிறார்கள். ஜமுக்காள நீதி கூட கிடையாது. சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம் என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. கல்வியை பொதுப்பட்டியலில் கோரும் திமுக மத்திய அரசில் இருந்தபோது என்ன செய்துகொண்டு இருந்தது.  பாஜக பொறுத்தவரையில் சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள்” எனவும் சீமான் ஆவேசமாக பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்