“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய், மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

TVK Leader Vijay speech in parandur

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்க இன்று பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்.

முதலில் ஏகனாபுரத்தில் மக்களை சந்த்திக்க தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அங்கு அனுமதி மறுத்து மேல்பொடவூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கிராம மக்களை சந்திக்க காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து இன்று காலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் சில மணிநேரத்திற்கு முன்னர் பரந்தூர் வந்தடைந்தார்.

ஏன் வந்தேன்?

மேல்பொடவூர் பகுதிக்கு பிரச்சார வாகனத்தில் வந்திருந்த விஜய், பிரச்சார வேனில் நின்றிருத்தபடியே மக்கள் முன் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் பேசுகையில், ” 910 நாட்களாக போராடி வரும் உங்க போராட்டத்தை பற்றி ராகுல் எனும் ஒரு சின்ன பையன் பேசுவதை கேட்டேன். அது என் மனச ஏதோ செஞ்சிடுச்சி. உடனே உங்க எல்லோரையும் பார்க்க வேண்டும் என தோன்றியது. உங்க எல்லோர் கூடவும் பேச வேண்டும் என தோன்றியது. உங்க எல்லோர் உடனும் நான் தொடர்ந்து நிற்பேன் என்று சொல்ல வேண்டும் என தோன்றியது.

விவசாயிகள் காலடி மண்ணை தொட்டு..,

இந்த நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள் விவசாயிகள். உங்கள் காலடி மண்ணை தொட்டு தான் என் அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என தோன்றியது. இங்கிருந்து தான் எனது கனவு அரசியல் பயணத்தை தொடங்குகிறேன். எனது முதல் மாநில மாநாட்டில், இயற்கை வள பாதுகாப்பு. இயற்கைக்கு ஊறு விளைவிக்காத வளர்ச்சி என கூறியிருதேன். ஓட்டு அரசியலுக்காக நான் இங்கு வரவில்லை.

13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக மற்றவே இந்த பரந்தூர் விமான நிலைய திட்டம் வருகிறது. இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்.  இந்த முடிவில் நாங்கள் (தாவெக) உறுதியாக நிற்போம்.

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல…

ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்று தான் நான் சொல்கிறேன். இதை நான் சொல்லவில்லை என்றால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என கதையை கட்டி விடுவார்கள்.

இன்னைக்கு புவி வெப்பமயமாதல் நம்மை பயமுறுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் சென்னை தத்தளித்து வருவதை நாம் பார்க்கிறோம். அதற்கு காரணம், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் சதுப்பு நிலங்களை அழித்தது தான் என்று கூறுகிறது பல்வேறு தகவல்கள். இப்படிப்பட்ட சமயத்தில் 90% விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை அழித்து விமான நிலையம் அமைப்பதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.

அரிட்டாபட்டியும் பரந்தூரும் வேறா?

மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிராக மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனை நான்  வரவேற்கிறேன். அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சனைக்கும் அரசு எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி போல பரந்தூர் பகுதி மக்களும் நம்ம மக்கள் தானே. எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாய நிலத்துக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விளைநிலங்களுக்கு எதிர்ப்பா?

நாடகம் ஆடுவதில் கில்லாடி..,

உங்க நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்க உங்க வசதிக்காக அவர்கள் பக்கம் நிற்பதும், நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும் உங்கள் விருப்பம். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி ஆச்சே. அதையும் மீறி விவசாயிகள் போராடினால் பிரச்சனை தான்.

மறுஆய்வு செய்க..,

உங்கள் விமான நிலையத்திற்காக நீங்க ஆக்கிரமிப்பு செய்த இடங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக்கொள்கிறேன். விவசாய நிலம் இல்லாத, பாதிப்பு குறைவாக உள்ள இடங்களாக பார்த்து தேர்வு செய்து உங்கள் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள்.

வளர்ச்சி தான் மக்களை முன்னேற்றம். ஆனால், அந்த வளர்ச்சியினால் ஏற்படும் அழிவு மக்களை வெகுவாக பாதிக்கும். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நானும், தமிழக வெற்றிக் கழகத் தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக நிற்போம்.

அனுமதி தரப்படவில்லை…

உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள் வந்து உங்களை சந்திக்கவே அனுமதி கேட்டோம். ஆனால், எனக்கு அனுமதி தரப்படவில்லை. நான் ஏன் ஊருக்குள் வரக்கூடாது என தடை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு நான் அனுமதி கொடுத்தார்கள்.

கொஞ்ச நாள் முன்னாடி நம்ம புள்ளைங்க (தவெக தொண்டர்கள்) துண்டு சீட்டு கொடுத்தார்கள். அதற்கு போலீசார் கைது செய்து விட்டார்கள். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. நல்லதே நடக்கும். உறுதியோடு நிற்போம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.” என பரந்தூரில் தனது ஆவேசமான உரையை நிறைவு செய்தார் தவெக தலைவர் விஜய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்