சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் என புரியவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் , இது விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் ஜெகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த சம்பவத்திற்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார். எக்ஸ் வலைதளத்தில் ” கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது அரசு. கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கூறியிருந்தார். திமுக மீது அவர் வைத்த விமர்சனங்களுக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி பதிலடியையும் கொடுத்துள்ளார்.
இது குறித்து எஸ்.ரகுபதி தனது எஸ்கே வலைத்தளத்தில் கூறியதாவது ” புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் திரு. ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை. லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தானே என்று கடந்து போக வேண்டுமா?” என கூறியுள்ளார்.
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் திரு. ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சம்பவம் நடந்து சில மணி…
— எஸ்.ரகுபதி (@regupathymla) January 20, 2025