விஜயின் பரந்தூர் பயணம் : மண்டபத்தில் குவிந்த கிராம மக்கள்! தடுத்து நிறுத்தப்பட்ட தவெக தொண்டர்கள்…
இன்று பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் பரந்தூர் பகுதி மக்களை தவெக தலைவர் விஜய் பொடவூர் தனியார் மண்டபத்தில் சந்திக்க உள்ளார். அங்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதியில்லை.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நிலம் கையப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி கிராம மக்கள் 910 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் இன்று அப்பகுதி மக்களை நேரில் சந்திக்க உள்ளார். இதற்காக முன்னரே தவெக சார்பில் காஞ்சிபுரம் காவல் அதிகாரிகளிடம் முன் அனுமதி கோரப்பட்டு இருந்தது. முன்னதாக போராட்ட களத்தில் மக்களை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கவே தற்போது ஏகனாபுரம் அருகே பொடவூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்திக்க அனுமதி அளித்தனர்.
அந்த தனியார் மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 13 கிராம பகுதி மக்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர். மக்களை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 7.40 மணிக்கே புறப்பட்டு விட்டார். பொடவூர் பகுதி தனியார் மண்டபத்திற்கு பகல் 12 மணி முதல் 1 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் அந்த இடத்திற்கு விஜய் வருகை தருவார் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இங்கு 13 கிராம மக்களை மட்டுமே சந்திக்க போலீசார் அனுமதி கொடுத்துள்ளதால் கட்சி தொண்டர்கள் இங்கு வர வேண்டாம் என அக்கட்சி தலைவர் விஜய் முன்னதாக அறிவுறுத்தி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அதனையும் மீறி பலர் விஜயை காண வருவதால் அவர்களை போலீசார் கண்ணன்தாங்கல் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். அவர்களுக்கு பொடவூர் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
தனியார் மண்டபத்திற்குள்ளேயும் 13 கிராம மக்களை அடையாள அட்டை காண்பித்த பிறகே உள்ளே செல்ல அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் அதிகமான கிராம மக்களை விஜய் சந்திக்க உள்ளார். தனியார் மண்டபத்திற்கு வரும் விஜய் அங்குள்ள மக்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.