விஜயின் பரந்தூர் பயணம்… எப்போது, எங்கு வருகிறார்? என்னென்ன கட்டுப்பாடுகள்?
இன்று காலை 11 மணி முதல் 1 மணிக்குள் ஏகனாபுரம் தனியார் மண்டபத்தில் மக்களை விஜய் சந்திக்க உள்ளார் என தவெக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை அனுமதி :
இப்போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று பரந்தூர் பகுதிக்கு வருகிறார். இதற்காக காஞ்சிபுரம் காவல் அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. போலீசார் தரப்பில் சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் :
முதலில் பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் சந்திக்க தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அது திறந்தவெளி மைதானம் என்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கு பதிலாக அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபடும் ஊர்மக்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அதே போல விஜய் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் அறிவுறுத்தல்
இதனால், சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டார தவெக தொண்டர்களுக்கு விஜய் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகவும் நேற்று தகவல் வெளியானது. அதாவது, தனது வருகையை அறிந்து பரந்தூர் பகுதிக்கு கட்டுப்பாடுகளை மீறி தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
எப்போது சந்திப்பு?
விஜய் வருகை குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதலில் ஊருக்குள் சென்று மக்களை நேரடியாக சந்திக்க தான் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு காவல்துறை தரப்பில் பாதுகாப்பு கருதி அனுமதி தரப்படவில்லை. இதுகுறித்து தளபதி (விஜய்),’மக்களை சந்திக்க தானே வருகிறேன். எங்கு சந்தித்தால் என்ன? அவர்கள் (காவல்துறை) எங்கு கூறுகிறார்களோ அங்கு சந்திக்கிறேன்.’ என கூறினார்” என்றார்.
மேலும், “காலை 11, 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த சந்திப்பு நிகழும். ஏகனாபுரத்தில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஊர்மக்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவர்.” என்றும் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
பரந்தூர் ஏகனாபுரம் தனியார் மண்டபத்தில் நாளை விஜய்யை சந்திக்க வரும் போராட்ட குழுவினருக்கு காலை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர் வழங்க
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிற்து. தவெக கட்சி தலைவராக முதல் முறையாக விஜய் மக்களை நேரடியாக களத்தில் சந்திக்க உள்ளதால் இந்த சந்திப்பு மிக முக்கிய ஒன்றாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.