ஈரோடு கிழக்கு : “வாக்கு சேகரிப்பதை விட ‘இது’ தான் முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பதை விட அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பதே முதன்மை பணி என கட்சியினருக்கு அறிவுறுத்தியதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
பிரதான கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். மொத்தம் 55 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாதக வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, முதலமைச்சர் கூறிய அறிவுரை, கலைஞர் மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவற்றை பற்றி பேசினார்.
அவர் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பதை விட மக்களை சந்திப்பது அவர்கள் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துங்கள் என முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் நேற்று வரை 13 வாரர்டுக்களுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்தோம், தற்போது ஈரோடு கிழக்கு சத்யா நகர் பகுதிக்கு வந்துள்ளோம். இன்று குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதில் யார் யாருக்கு எந்த வீடு என்பதில் சிறு பிரச்சனை இருக்கிறது. அதனை நாங்கள் விரைவில் தீர்த்து வைப்போம்.
மேலும் இங்குள்ள சிலர் கலைஞர் உரிமை தொகையில் விடுபட்டதாக கூறினார்கள். மொத்தம் 1.60 கோடி மனுக்கள் பெறப்பட்டு அதில் 1.16 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. விடுபட்ட சிலருக்கும், அதன் பிறகு அனுப்பப்பட்ட மனுக்கள் குறித்தும் துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் அதனை நிவர்த்தி செய்ய முதலமைச்சர் கூறியுள்ளார்.
கலைஞர் உரிமை தொகை வழங்குவதில் சில கண்டிஷன் இருக்கு. அது நிறைவு செய்யப்படாமல் இருக்கலாம்.அதையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.