“இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்!
இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது விமர்சனங்களையும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் தனது மேடை பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான கருத்தியல் கொண்ட அவரை இந்தியா கூட்டணியில் இணைய சொல்லி காங்கிரஸ் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஏனென்றால், விஜய் எதிர்க்கும் திமுக, இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் திமுகவின் தலைமையிலான கூட்டணியில் செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் தவெக தலைவர் விஜய்-க்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், “விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அது தான் அவருக்கும் அவரது கொள்கைக்கும் நல்லது. விஜய் அவரது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக பேசினார். அப்படி அவர் மதவாத சக்திகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அவர் இந்தியா கூட்டணியில் தான் இணைய வேண்டும். அதுதான் அவரது கொள்கைக்கும் கோட்பாடிற்கும் நல்லது” என தெரிவித்தார்.
மேலும், “தமிழக அரசு எவ்வளவோ கடன் வாங்குகிறது. அப்படியே, பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு கொடுக்கவும் கடன் வாங்கி மக்களுக்கு கொடுத்திருக்கலாம். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்துவிட்டது. இனி அடுத்த வருடமாவது பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு பணம் தர வேண்டும்.” என ஆளும் திமுக அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவுக்கு எதிராக கருத்து பேசி வரும் விஜய்க்கு இந்தியா கூட்டணிக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைவரின் பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.