ஹமாஸுடன் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.! எப்போது அமல்?
போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் கடந்த 2023-ல் தொடங்கிய இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர், கிட்டத்தட்ட 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனியர்கள் கொண்டாடினர்.
காசா பகுதியில் 15 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், போர் நிறுத்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை ஏற்காமல் அச்சுறுத்திய பின்னர், இஸ்ரேலிய அமைச்சரவை இறுதியாக ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.
அதன்படி, ஹமாஸ் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க உள்ளதாகவும், இஸ்ரேல் 95 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் 6 வாரங்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.