ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : “திமுகதான் 200% வெற்றி”…வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகதான் 200% வெற்றி பெறும் என மக்கள் கூறுவதாக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாள் என்பதால் திமுக சார்பாக போட்டியிடும் வி சந்திரகுமார் இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் பேசியதாவது ” தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் திமுக தான் வெற்றிபெறும் என மக்கள் கூறுகிறார்கள்.
இந்த சூழலில், மக்களுக்காக திமுக செய்த உதவிகளை முன்னிறுத்தி நாங்கள் இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெரிய வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியை எங்களுக்கு வழங்குவார்கள் என நம்பிக்கையோடு இடைத்தேர்தல் களத்தை நாங்கள் சந்தித்துள்ளோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய நம்பிக்கைகளை வைத்துள்ளனர். எனவே, கண்டிப்பாக எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” எனவும் வி சந்திரகுமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ” திமுக இப்போது மக்களுக்கான திட்டத்தை முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். அப்படி நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் 100 % திமுக வெற்றி என்று சொல்லவில்லை..அப்படி சொன்னால் அருகில் இருக்கும் பெண்கள் 100% இல்லை 200% திமுக வெற்றிபெறும் என கூறுகிறார்கள். எனவே மக்கள் மீது எங்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது” எனவும் சந்திரகுமார் தெரிவித்தார்.