குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்.!
2024-ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விளையாட்டு விருதான 'மேஜர் தியான் சந்த்' கேல் ரத்னா விருதினை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
டெல்லி: துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், செஸ் உலக சாம்பியன் குகேஷ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான இந்த கேல் ரத்னா விருது குகேஷ் (செஸ் வீரர்) ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி வீரர்), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்) பிரவீன் குமார் (பாரா தடகள வீரர்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இன்று காலை நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சென்னையின் முதலில் குகேஷிற்கு கேல் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 18 வயதாகும் குகேஷ் கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இதன் மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,’மேஜர் தயான் சந்த்’ கேல் ரத்னா விருது வழங்கி சிறப்பித்தார்.
அவர்களுடன் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்ற ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் T64 பிரிவில் பிரவீன் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.