நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து – 20 குழுக்கள் அமைப்பு!
நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே 10 குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 20 குழுக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மும்பை பாந்த்ராவில் உள்ள அவருடைய வீட்டில் இரவில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அவரை கொடூரமாக கத்தியை வைத்து குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவில் சயிப் அலிகான், தன் 2 மகன்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். சரியாக நள்ளிரவு 2 மணி அளவில் கொள்ளையன் வீட்டுக்குள் நுழைந்ததாக அங்கு வேலை செய்பவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். கொள்ளையனை பார்த்து வேலைக்காரர் கூச்சலிட, சத்தம் கேட்டு எழுந்து வந்த சயிப்பை பார்த்த அந்நபர் தாக்க தொடங்கி இருக்கிறார்.
இந்த சண்டையில், கொள்ளையன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த சயிப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் உடல்நிலை தேறி வருகிறது.
இந்த சூழலில், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை. ஆனால் வீட்டிற்கு நுழைந்த போது அந்த திருடனின் முகம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அதனை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது திருடன் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தற்போது பரபரப்பான தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை, வீட்டில் பணிபுரியும் 56 வயதான எலியாமா பிலிப் என்ற செவிலியர் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.