ஸ்தம்பித்து போன சாலை… பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்!
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால், தாம்பரம் GST சாலை, பெருங்களத்தூர், ஸ்தம்பித்து போனது.
சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, பரனூர், பெருங்களத்தூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில், பெருங்களத்தூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், நேற்று காணும் பொங்கல் என்பதால், அதையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதால் சென்னை தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னையில் கல்விக்காகவும் பணிக்காகவும் தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் கடந்த ஜன 14-ம் தேதி முதல் ஜன 19-ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது.
மேலும், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் பயணம் பலரும் பயணம் செய்து, சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு தற்பொழுது தொடர் விடுமுறை முடிந்து மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை வரத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.