அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்ற நிலையில், 20 காளைகளை அடக்கிய பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கி பரிசுகளை வெல்வார்கள். பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய இடங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் பெற்ற இடம் என்று சொல்லலாம்.
நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது. இறுதிச்சுற்றில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசான 8 லட்சம் மதிப்புக்கொண்ட காரை பெற்றுக்கொண்டார். அவருக்கு அடுத்தபடியாக, குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
அவனியாபுரத்தை தொடர்ந்து இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கியது. 1100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கார், டிராக்டர், இருசக்கர வாகனம், ஆட்டோ, சைக்கிள், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாகவும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 9 சுற்றுகள் நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 20 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடத்தை பிடித்து காரை பரிசாக வென்றார். அவருக்கு அடுத்ததாக இரண்டாவது பரிசு பொதும்பு சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. இவர் 13-காளைகளை அடக்கினார்.
மேலும், ஏற்கனவே, கடந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த இந்த அபி சித்தர், 10 காளைகளை அசத்தலாக அடக்கி பிடித்து மஹிந்திரா தார் கார் பரிசாக வென்றார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார்.