அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் தொடர்பான 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு செய்ய ஊதிய கமிஷன் ஒன்று மத்திய அரசால் அமைக்கப்படும். இந்த ஊதிய கமிஷனானது, நாட்டின் பணவீக்கம், வருவாய், விலைவாசி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஊதிய உயர்வு மற்ற விவரங்கள் குறித்து மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும்.
இந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்ற சலுகைகள் குறித்த மாற்றங்களை அமல்படுத்தும். இறுதியாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பில் இருந்த போது 7வது ஊதிய கமிஷன் பிப்ரவரி 28, 2014-ல் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் நவம்பர் 19, 2015-ல் சமர்பிக்கப்பட்டு ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த பரிந்துரையானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செயல்படுத்தப்படும்.
அதன்படி, தற்போது 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறுகையில், 2026ஆம் ஆண்டுக்குள் 8வது ஊதிய கமிஷன் அமைக்கப்படும் என்றும், அதில் யார் யாரெல்லாம் உறுப்பினராக இருப்பார்கள் என்பது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மணிலா அரசுகள் மற்றும் மற்ற பொதுத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் அமலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளின் படி பயன்பெற்று வருகின்றனர்.