“இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மனிதாபிமான உதவிகளுக்கு வழிவகுக்கிறது..” இந்தியா வரவேற்பு!
இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் அமைப்பிற்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 15மாதங்கள் கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இதில் காசா நகரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மத்தியஸ்தலம் செய்தன. பல்வேறு நாட்டு தலைவர்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டு வந்னர். இந்தியாவும், இரு தரப்பு போரால் காசா நகரத்து மக்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியது.
இப்படியான சூழலில், அமெரிக்கா, கத்தார் நாட்டு மத்தியஸ்தலத்தை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பு இடைக்கால போர்நிறுத்ததற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி அறிவித்தார். இந்த போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் 6 வாரங்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ” காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் போர்நிறுத்தம் பற்றிய அறிவிப்பை இந்தியா வரவேற்கிறது. இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மனிதாபிமான உதவிக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர பாதைக்கு மீண்டும் திரும்புமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6 வார போர் நிறுத்தம் ஜனவரி 19இல் தொடங்குவதால் தற்போதும் காசாவில் ஆங்காங்கே இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் அமைச்சகத்தில் வாக்கெடுப்பு நடத்தி அதன் பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் ஒரு தகவல் கூறப்பட்டு வருகிறது.