பொங்கல் 2025 : ஜல்லிக்கட்டுக்கு ரெடியான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு…
ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை அவனியாபுரத்திலும், நாளை மறுநாள் பாலமேட்டிலும், ஜனவரி 16இல் அலங்காநல்லூரில் நடைபெற உள்ளது.
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண பல்வேறு ஊர்களில் இருந்து பார்வையாளர்கள் இங்கு வருவார்கள். உலகபுழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.
நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதி, காளைகளை அடக்கும் பகுதியில் தேங்காய் நார் கொட்டும் பணி விறுவிறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 2,035 காளைகளும், 1735 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஒரு மணிநேரத்திற்கு 100 காளைகள் வீதம் களத்தில் அவிழ்க்கப்பட உள்ளது. காலை 5 மணி முதல் காளைகள், வாடியில் அவிழ்க்கப்படும். மாலை 4 மணி வரை காளைகள் அவிழ்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்க்க ஆன்லைன் வழியாக டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி. போலி டோக்கன் வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காளைகளுடன் வருவோர் டோக்கன் மற்றும் மாட்டின் உரிமையாளர் ஆதார் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அடுத்ததாக, நாளை மறுநாள் ஜனவரி 15 அன்று பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் சூரியின் ஜல்லிக்கட்டு காளை பங்கேற்க உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை மூன்றில் ஏதேனும் ஒரு பகுதி ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதி ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.