சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!
பெரியார் பற்றி பாஜக பேசி வரும் கருத்துக்களை தான் சீமான் பேசியுள்ளார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இருந்தும் பாஜகவினர் சீமான் கருத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சீமான் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழிசை சௌந்தராஜனும் சீமான் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,” சீமான் பெரியாரை பற்றி பேசிவரும் கருத்துக்களை தான் பாஜக நீண்ட வருடங்களாக தெடர்ந்து பேசி வருகிறது.
சீமான் பேசும் கருத்துக்கள் பாஜகவினர் பேசும் கருத்துக்கள் தான். எங்களுடைய கருத்தியல்களை அண்ணன் சீமான் தற்போது பேசி வருகின்றனார். பெரியார் பற்றிய உண்மைகள் இனி தொடர்ந்து வெளிப்படுத்தப்படும். ” எனக் கூறிய தமிழிசையிடம் சீமான் பாஜகவின் பி டீம் என சொல்லப்படுகிறதே என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தமிழிசை, “சீமான் எங்கள் (பாஜக) பி டீம் இல்லை. அவர் எங்கள் Theme-ஐ(கருத்தியல்) பேசி வருகிறார் அவ்வளவு தான். இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல . ஆண்டாள் வளர்த்த தமிழ். பெரியார் வளர்த்த தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்த தமிழ். ” என்று தமிழிசை கூறினார்.
தமிழிசை மேலும் பேசுகையில், ” திமுக அரசு பொங்கல் பரிசு ரூ.1000 கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு ரூபாய் கூட அவர்கள் தரவில்லை.” என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை திமுக நியாயமாக நடத்தாது என்பதால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம். திமுகவை தான் அரசியல் கட்சிகள் புறக்கணித்து இருக்கிறது. 2026 தேர்தலில் மக்களால் திமுக புறக்கணிக்கப்படும்.” என்றும் தமிழிசை பேட்டியளித்துள்ளார்.