‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!
பெண் கல்வி மாநாட்டிற்கு ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தும் தலிபான்கள் பங்கேற்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கல்வி குறித்த மாநாடு என்பதால் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் பெரும்பாலான நாடுகள் பங்கேற்ற நிலையில், இந்த மாநாட்டில் முக்கியமாக பங்கேற்க வேண்டிய ஆப்கானிஸ்தான் மாநாட்டை புறக்கணித்துள்ளது. ஆபாகனிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம் ஆனால் அந்நாட்டு அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அந்நாட்டில் மற்ற கல்வி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர் என பாகிஸ்தான் கல்வி அமைச்சர் மக்பூல் சித்திக் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது இருந்தே பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன. அதில், மிக முக்கியமான கல்வி உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டது. அந்நாட்டில் 6ஆம் வகுப்புக்கு மேல் பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை உலக நாடுகள் வன்மையாக கண்டித்து வருகின்றன. இருந்தும் இந்த தடை தொடர்ந்து தான் இருக்கிறது.
தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து இதுவரை 14 லட்சம் பெண்கள் தங்கள் கல்வி வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும், கடந்த 2024 ஏப்ரலில் இருந்து மட்டும் சுமார் 3 லட்சம் பெண்கள் கல்வி உரிமையை இழந்துள்ளனர் என்றும் யூனஸ்கோ அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் கல்வி மறுக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் கல்விகற்க செல்வதால் பெண்கள் பாடம் நடத்த கூட அனுமதிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் கல்வி சேர்க்கை விகிதம் பொதுவாகவே குறைந்து வருகிறது என்றும் யூனஸ்கோ முன்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.