“அந்தர் பல்டி திமுக! நீட் ரெட்டை வேடம், கடனில் முதலிடம்” புட்டு புட்டு வைத்த இபிஎஸ்!
திமுக இரட்டை வேடம் போடுகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றம் செய்யவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடர் நிகழ்வுகள் பற்றியும், 4 ஆண்டுகால திமுக அரசு பற்றியும் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்து பேசினார் .
இபிஎஸ் பேட்டி :
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ” ஆளுநர் வாசிக்காத உரைக்கு பதிலளிக்கும் விதமாக பல்வேறு கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலலித்துள்ளார்.
2021 தேர்தல் வாக்குறுதிகளில் திமுக கூறியதில் 20% கூட நிறைவேற்றம் செய்யப்படவில்லை. நான் அதனை ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசுகையில் குறிப்பிட்டேன். சில அறிவிப்புகளை சுட்டி காட்டினேன். 525 வாக்குறுதிகளில் இதுவரை திமுக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றம் செய்யவில்லை.
நீட் ரத்து?
திமுக தேர்தல் வாக்குறுதியில் நீட் விலக்கு முக்கிய அறிவிப்பாகும். இதனை ஸ்டாலின் மற்றும் உதயநிதி தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள் . திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்போது நீட் ரத்து செய்யப்படூம் என்று கேட்டால், அதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. மத்திய அரசு தான் நீட் ரத்து செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.
இவ்வாறு பொய்யான வாக்குறுதிகளை கூறி, இளைஞர்களை, பெற்றோர்களை ஏமாற்றி வெற்றிபெற்ற பிறகு, தற்போது நீட் பற்றிய கேள்விக்கு நீதிமன்றத்தையும் மத்திய அரசையும் சுட்டி காட்டுகிறது. இதுதான் திமுகவின் இரட்டை வேடமாகும். இது குறித்து நான் பேசியதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை.
விண்ணைமுட்டும் விலைவாசி :
விலைவாசி விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் அரிசி விலை ரூ.35 முதல் 45 வரை பல்வேறு ரகங்கள் இருந்தன. ஆனால் இப்போது, அரிசி ரகம் ரூ.70 முதல் 85 வரை இருக்கிறது. எண்ணெய் விலை, பருப்பு, பூண்டு விலை எல்லாம் உயர்ந்துள்ளது. இது குறித்து அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. பேசும்போது ஸ்டாலின் பேருந்து, ஸ்டாலின் பேருந்து என மக்கள் கூறுவதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆமாம், ஓட்ட ஓடசல் பேருந்து எல்லாம் ஸ்டாலின் பேருந்து தான். பாதி மாநகர பேருந்து கண்டமான பேருந்து தான். அரசு பேருந்து நிலைமை மோசமாக இருக்கிறது. பணியாளர்களுக்கு உரிய பணபலன் கிடைக்கவில்லை. நிலுவை தொகை அளிக்கப்படவில்லை.
கடன் வாங்குவதில் முதலிடம் :
அனைத்து நகரப்பேருந்துகளிலும் இலவசம் என கூறினார்கள். அதன் பிறகு அந்தபல்டி அடித்து பஸ் முன்னாடி பின்னாடி லிப்ஸ்டிக் அடிச்சி அதில் மட்டும் இலவசம் என கூறுகிறது திமுக அரசு. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக கூறுகிறார்கள். அரசு வருமானம் அதிகரித்து ரூ.1000 கொடுத்தால் பரவாயில்லை. கடன் வாங்கி கொடுக்கிறார்கள். இந்த கடனை எப்போது அடைப்பது?
2021 வரை வந்த வருவாயை காட்டிலும், பெட்ரோல், மதுபானம், காலால் வரி , பத்திரப்பதிவு என பல்வேறு வகைகளில் ரூ.1,10894 கோடி வருமானம் 2024 – 2025 காலகட்டத்திற்குள் வந்துள்ளது. அப்படி இருக்கும் போது ஏன் கடன் வாங்குகிறீர்கள்? திமுக ஆட்சிக்கு வந்த 4 வருடத்தில் ரூ.3.54 லட்சம் கோடி கடன் வாங்கிட்டாங்க. வருவாயுடன் சேர்த்து ரூ.4.64 லட்சம் கோடி வருகிறது. இதனை வைத்துக்கொண்டு என்ன நல்ல திட்டம் கொண்டு வந்தீர்கள்? கடனை எப்படி திருப்பி செலுத்த போறீங்க? திமுகவின் சாதனை என்பது, இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது. ” என்று அரசை கடுமையாக சாடினார் எடப்பாடி பழனிச்சாமி.