“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!
தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்கிற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ” I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் என்றால் நிச்சியமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று இருப்போம்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
அதைப்போல, திமுக ஆட்சி இருந்த வரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு என்பது நுழையவில்லை. அதிமுக ஆட்சி வந்தபிறகு தான் தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு நுழைந்தது. நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டு திமுக மக்களை ஏமாற்றிவிட்டதாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ” எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன.
அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.
ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” எனவும் விஜய் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை…— TVK Vijay (@tvkvijayhq) January 11, 2025