கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!
நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தை எட்டியதை அடுத்து நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அங்கீகாரம் செய்தது தேர்தல் ஆணையம்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ‘நாம் தமிழர் கட்சி’. அப்போது முதல் இக்கட்சி பல்வேறு தேர்தல் களங்களை கண்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தை பெற்று வருகிறது. இருந்தும் மாநில கட்சி அங்கீகாரம் பெரும் அளவுக்கு வாக்கு சதவீதத்தை எட்டாது இருந்தது.
இந்நிலையில், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 விகித வாக்கு சதவீதத்தை ஒட்டுமொத்தமாக பெற்றது. தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சி 8 சதவீத வாக்கிற்கு மேல் பெற்றால் அக்கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
அதன்படி, நாம் தமிழர் கட்சியை ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு வெளியிட்டுள்ளது. இனி நாம் தமிழர் கட்சி தங்களுக்கென தனி சின்னத்தை தேர்வு செய்து அதனை தங்கள் கட்சி சின்னமாக பெற முயற்சி மேற்கொள்ளலாம். கடந்த 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு பெற முடியாமல் பிறகு மைக் (ஒலிவாங்கி) சின்னத்தை பெற்று தேர்தலில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அங்கீகாரம் பெற்றது குறித்து அக்கட்சி தலைமை தங்கள் சமூக வலைதள பக்கத்தில், ” நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இவ்வறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று (10-01-2025) இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்!
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.
இவ்வறிவிப்பை… pic.twitter.com/P37PuSFzQ0
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) January 10, 2025