த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?
தவெக மாவட்ட செயலாளர்கள் விவகாரம் இன்று நிறைவடைந்ததாகவும் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இன்னும் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் உள்ளது.
தவெக கட்சி முதலாம் ஆண்டு விழா நடைபெறும் போது கட்சி நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்கட்சி பொது செயலாளர் ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட செயலாளர்கால் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்த்த சிலருக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக தூத்துக்குடி பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக தொடர் குழப்பம் நீடித்தது.
தூத்துக்குடி தவெக பொறுப்பாளர்களில் முக்கிய நபராக இருக்கும் அஜிதா ஆக்னலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிகிறது. இவர் போல சிலருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு சலசலப்பு நிலவியது. ” மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டத்திற்கு வர சொல்லி இருக்காங்க” என அஜிதா ஆக்னல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிறகு சிறிது நேரம் கழித்து அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது . அந்த முக்கிய முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிடைத்த தகவலின்படி, தவெகவில் 100 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்ய உள்ளதாகவும், இதற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டதாகவும், அந்த விண்ணப்பங்களை, தேர்வு செய்யப்பட்ட நபர்கள் பூர்த்தி செய்து கட்சி தலைமையிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதன் பிறகு உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்து கட்சி தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது.