பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!
பள்ளி குழந்தை பலியான சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தனியார் பள்ளி வளாகத்தில் சிறுமி லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைய, அவர் உள்ளே விழுந்து உயிரிழந்தார்.
இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை உயிரிழந்தது எனக் கூறி குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், பள்ளி தாளாளர், முதல்வர், வகுப்பு ஆசிரியர், ஆகியோருக்கு இன்று ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். அத்துடன், இந்த வழக்கில் 3 பேரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு அளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.