“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5ஆண்டு வரை சிறை தண்டனை.
பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆனால் ஆயுள் காலம் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம் எனவும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் மசோதா எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்., இந்த சட்ட திருத்தம் மீதான விவாதம் சட்டப்பேரவையின் கடைசி நாளான நாளை நடக்க உள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக, நீங்கள் ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என பேசினார். இது குறித்து பேசிய அவர் “எம்.எல்.ஏ. சரஸ்வதி தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதாவது, நீங்கள் ஆளும் (பாஜக) மாநிலங்களை விட ஏன் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். ஏனென்றால், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அரசு அடக்குகிறது. எங்களுடைய ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்கக்கூடிய வகையில், இன்று ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் சட்டத்தை இன்னுமே கடுமையாக்க கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.