“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!
நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பின் தண்டனையை நிறுத்தி வைக்க டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து போராடி வருகிறார்.
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி பரிவர்த்தனைகளில் மறைத்தாகவும் டிரம்ப் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நியூ யார்க் நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவித்தது.
நியூ யார்க் நீதிமன்ற நீதிபதி எலன் கெஸ்மர், நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்றும் இதற்கான தீர்ப்பு ஜனவரி 10-ல் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இதனை அடுத்து தண்டனையை நிறுத்தி வைக்க டிரம்ப் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் வழக்கறிஞர் டோட் பிளன்ச், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 7) மேல்முறையீடு செய்தார். ஆனால், அங்குள்ள நீதிபதி ஜுவான் எம்.மெர்ச்சனும் , தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய டிரம்பின் கோரிக்கையை நிராகரித்தார்.
இதனால், ஜனவரி 10ஆம் தேதியன்று டொனால்ட் டிரம்ப் வழக்கு மீதான தண்டனை அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபராக ஜனவரி 20இல் பதவி ஏற்க உள்ள டிரம்பிற்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், இது வர்த்தக பரிமாற்றத்தை மறைத்த வழக்கு என்பதால் சிறைதண்டனை விதிக்க வாய்ப்பில்லை என்றும், அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும் அமெரிக்க நீதிமன்ற வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க நாட்டின் சட்ட விதிகளின்படி, ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் நபருக்கு எதிராக குற்றவியல் தண்டனையை செயல்படுத்த முடியாது. அவர் பதவியை விட்டு விலகிய பிறகே நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், ஜனவரி 20க்கு முன்னரே, ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பாகி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க போகும் முதல் அதிபர் என்ற மோசமான சாதனையை டொனால்ட் டிரம்ப் படைக்க உள்ளார். அதனை தடுக்கவே பல்வேறு வகைகளில் மேல்முறையீட்டை மேற்கொண்டு வருகிறார் டொனால்ட் டிரம்ப்.