ரோஹித், கோலி ஏமாற்றம்! வெற்றி.? தோல்வி.? டிரா.? விறுவிறுப்பான பாக்சிங் டே டெஸ்ட்!
பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டின் இறுதி நாள் ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி , கே.எல்.ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளன. 3வது போட்டி சமன் செய்யப்பட்டது.
4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிக்கிஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா முதலில் திணறினாலும், அடுத்து நிலைத்து ஆடி 234 ரன்கள் குவித்தது.
அதனை தொடர்ந்து, 339 ரன்கள் முன்னிலை வகித்துள்ள ஆஸ்திரேலியா அணியை இன்று கடைசி நாள் (5ஆம் நாள்) ஆட்டத்தில் 340 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஷ்வால், ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், கேப்டன் ரோஹித் வழக்கம் போல சொற்ப ரன்களில் (9 ரன்கள்) பேட் கம்மின்ஸ் பஞ்சுவீச்சில் மிட்சல் மார்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தார்.
அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 பந்துகள் எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனை அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 29 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் நுழைய இந்திய அணிக்கு பார்டர் கவாஸ்கர் தொடர் வெற்றி முக்கியம் என்ற நிலையில், முக்கிய நட்சத்திர வீரர்களின் மோசமான ஃபார்ம் கிரிக்கெட் ரசிகர்களை கலக்கமடைய செய்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை இளம் வீரர்களே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 340 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெரும். விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினால் இந்த போட்டி டிரா செய்யப்படும். இன்றைக்கும் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்து விட்டால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னேறிவிடும். இன்னும் சில மணி நேரங்களில் போட்டியின் முடிவு தெரிந்து விடும் .
தற்போதைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 40.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 52 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 14 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற 254 ரன்கள் தேவை உள்ளது.