நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!
தமிழ்நாட்டில் சனாதன சக்திகள் வேரூன்றிவிடக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக ‘மது ஒழிப்பு மாநாடு’, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ , ‘விஜயின் அரசியல் வருகை’, திமுக அழுத்தத்தால் அம்பேத்கர் விழாவில் கலந்துகொல்லவில்லை என்ற விஜயின் விமர்சனம் என விசிகவை சுற்றியும் , விசிக – திமுக கூட்டணி குறித்தும் பல்வேறு யூகங்கள் உலா வந்தன.
இதனை போக்கும் விதமாக திமுக கூட்டணியில் விசிக ஏன் நீடிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய திருமாவளவன், ” திருமாவளவன் தடுமாற்றத்தில் இருக்கிறார். சராசரி மனிதரை போல பொருளியல் ஆதாயம் தேடி சில முடிவுகளை எடுக்கிறார். திமுகவின் அழுத்தத்திற்கு பயந்து அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்காமல் இருக்கிறார் என செய்திகள் பரப்பி என் மீதான நம்பக தன்மை மீது தாக்குதல் நடத்தினார்கள். வேறு ஆப்சன் இல்லை அதனால் விசிகவுக்கு திமுக அழுத்தம் கொடுக்கிறது என்பதில் ஒரு நியாயம் உள்ளது.
அரசியல் களத்தில் விசிகவுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கும் போதும், அந்த வாய்ப்புகள் வேண்டாம் என்று திருமாவளவன் முடிவு எடுக்கிறார் என்றால், அந்த முடிவு எவ்வளவு துணிச்சல் வாய்ந்த முடிவாக இருக்கும், கொள்கை சார்ந்த முடிவு என்பதை கூற இங்கு பலர் தயாராக இல்லை. அதனை பேசாமல் திமுக அழுத்தம் கொடுக்கிறது என்று மட்டும் கூறுகிறார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எண்ணிக்கை எங்களுக்கு பெரியதல்ல. நாட்டு நலனே முதன்மையானது. சனாதன சக்திகள் இந்த மண்ணில் வலுபெற்றுவிட கூடாது என்பதற்காக நாங்கள் இந்த கூட்டணியில் நீடிக்க விரும்புகிறோம் என்று சொன்னேன்.
தமிழகம் , கேரளாவை தவிர சனாதன சக்திகள் மற்ற மாநிலங்களில் வேரூன்றி விட்டன. அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் அவர்கள் வேரூன்றி விட வேண்டும் என அதீத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை வலுபெறவிடாமல் தடுக்கதான், விசிக இந்த பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அதற்காக கூட்டணியில் எத்தனை இடங்கள், என்ன பதவி, பொருளியல் ஆதாயம் என்ன, எவ்வளவு அதிகார பகிர்வு என்ற கோணத்தில் நாங்கள் சிந்திக்கவில்லை. தமிழ்நாட்டில் சனாதன சக்திகள் வேரூன்றி விடக்கூடாது என்பதை தான், நாம் தொலைநோக்கு பார்வையோடு மதிப்பீடு செய்கிறோம். திராவிட கட்சிகளோடு முரண்பாடு உண்டு, கருத்து வேறுபாடு உண்டு, விமர்சனம் உண்டு. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் என கூறியதற்கு காரணம் உண்டு.
அதிமுக பலவீனப்பட்டால், அந்த இடத்தில் பாஜக வந்துவிடும் என்பது தான் எங்கள் கவலை. இதுதான் விசிகவின் பார்வை, திருமாவளவன் பார்வை, திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்பது திமுகவை விமர்சிப்பது வேறு, திராவிட அரசியலை பிழை என கூறுவது சனாதனத்திற்கு ஆதரவு அழிப்பது போல, திமுக திராவிட அரசியல் பேசும் ஒரு அரசியல் கட்சி. திராவிட அரசியல் திமுகவோடு மட்டும் முடிந்து விட போவதில்லை. அது ஆரிய மனப்பான்மை எதிர்ப்பு அரசியல் பேசும் கட்சி. இதனால் தான் திமுக கூட்டணியில், மதசார்பற்ற கூட்டணியில் விசிக நீடிக்கிறது.” என திருமாவளவன் பேசுகிறார்.